தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று காவல்துறையின் உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐபிஎஸ், தற்போது கூட்டுறவு பால் உற்பத்தி சங்கத்தின் (ஆவின்) கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, திமுக ஆட்சி காலத்தில் இவர் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் உளவுத்துறை கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது
உளவுத்துறை டிஜிபியாக இருந்த பால நாக தேவி ஐபிஎஸ், தற்போது சைபர் கிரைம் பிரிவு டிஜிபியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாகப் பணியாற்றி வந்த செந்தில்வேலன் ஐபிஎஸ், தமிழ்நாடு போலீஸ் அகடமியின் ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார். பாதுகாப்பு உளவுப்பிரிவு (Security Branch) டிஐஜியாக தர்மராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பால் உற்பத்தி ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக இருந்த ராஜீவ் குமார் ஐபிஎஸ், ஊனமாஞ்சேரி காவல் பயிற்சிப் பள்ளியின் டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், பகேரியா செபாஸ் கல்யாண், சரவணன், கருண் உத்தவ் ராவ், மயில்வாகனன், மதன், சண்முகம், மாதவன் மற்றும் சிலம்பரசன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளையும் வெவ்வேறு பணியிடங்களுக்கு மாற்றி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இடமாற்றங்கள், காவல்துறையின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
