தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்த உள்துறை செயலர் தீரஜ்குமார், சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை என்று விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமனுடன் இணைந்து அவர் கூறியதாவது:
தமிழகத்தில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகத் தொடர் விவாதங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், 2021-ஆம் ஆண்டில் 1,597-ஆக இருந்த கொலை வழக்குகளின் எண்ணிக்கை, 2025-ஆம் ஆண்டில் 1,461-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், 2021-இல் 422-ஆக இருந்த பாலியல் வன்கொடுமை வழக்குகள், 2025-இல் 401-ஆகக் குறைந்துள்ளன. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருவதில் அரசு உறுதியாக உள்ளது.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், “2021-இல் 6,800-ஆக இருந்த போதைப்பொருள் தடுப்பு வழக்குகள், 2024-இல் 11,000-ஆக அதிகரித்துள்ளன. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தக் காவல் துறை மேற்கொண்ட தீவிரக் கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளாலேயே வழக்குப்பதிவு எண்ணிக்கை கூடியுள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்குச் சீர்குலைவுக்குப் போதைப்பொருட்கள் மட்டுமே காரணம் என்று வகைப்படுத்த முடியாது” என்று தெளிவுபடுத்தினார்.
காவல் நிலைய மரணங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர், “காவல் நிலைய மரணங்கள் எந்தச் சூழலிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. சிவகங்கை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அஜித்குமார் கொலை வழக்கில், காவல்துறையினர் மீதே குற்றம் சாட்டப்பட்டதால், விசாரணையில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்க அந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் மூலம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
கோவில் விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், தமிழகத்தில் அமைதியான சூழலை நிலைநாட்டக் காவல்துறை முனைப்புடன் செயல்படுவதாகவும் உள்துறை செயலர் உறுதிபடத் தெரிவித்தார்.
