தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வலியுறுத்தியும், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் ஆகியவற்றுக்குக் கண்டனம் தெரிவித்தும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது,

“பெரியாரின் கொள்கை வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறிக்கொள்ளும் தி.மு.க. அரசு, சமூக நீதிக்கான அடிப்படைத் தேவையான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தத் தயங்குவது ஏன்? கூட்டணி மாநிலங்களில் இக்கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படும் நிலையில், தமிழக அரசு மட்டும் விளம்பர அரசியலில் ஈடுபடுவது சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம். தி.மு.க. தன்னை ‘பெரியாரின் பேரன்கள்’ என்று கூறிக்கொள்வது வெறும் போலி வேஷமே,” என்று அவர் விமர்சித்தார்.

தமிழகத்தின் தற்போதைய பாதுகாப்புச் சூழல் குறித்துப் பேசிய அவர், “அரசியல் கட்சி அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசுவது முதல், கல்லூரி மாணவி மீதான கொடூர வன்முறை வரை நிகழ்வுகள் தொடர்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் கணிசமானவர்கள் ஆளும் கட்சியுடன் தொடர்புடையவர்களாக இருப்பது வேதனையளிக்கிறது. போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று மாநிலத்தையே போதைப்பொருட்களின் கூடாரமாக மாற்றியுள்ளனர்,” என்றார்.

மக்கள் சந்திப்பு நிகழ்வுகளை முடக்கும் நோக்கில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள், ஜனநாயகத்திற்கு எதிரானவை என்று குறிப்பிட்ட அவர், “த.வெ.க. தலைவரின் மக்கள் எழுச்சியைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரண்டு போயுள்ளனர். ஜனநாயக நாட்டில் ஒரு தலைவரை மக்கள் சந்திப்பதைத் தடுக்கும் அதிகாரம் எவருக்கும் இல்லை. இந்த நெறிமுறைகளை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்,” என வலியுறுத்தினார்.

மேலும் “இன்னும் 50 நாட்களில் மாற்றம் நிகழும். வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் சமூக நீதி காக்கப்படும் மக்களாட்சி மலரும். விஜய் அவர்களின் தலைமையில், பெண்களுக்கான பாதுகாப்பு மற்றும் சட்ட-ஒழுங்கு உறுதி செய்யப்படும் பாதுகாப்பான தமிழகம் உருவாகும்,” என என்.ஆனந்த் உறுதிபடத் தெரிவித்தார்.