நாடு முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், புதிய கட்டுப்பாடுகளை மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, கிராமப்புறங்களில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்த 45 நாட்களுக்குப் பிறகே அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவு ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சமையல் எரிவாயு விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழகத்தின் கிராமப்புறப் பகுதிகளில் சிலிண்டர் கிடைப்பதில் பெரும் சிரமம் நிலவுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கவும், விநியோகத்தைச் சீர்படுத்தவும் புதிய நடைமுறையை மத்திய அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
அதன்படி கிராமப்புற நுகர்வோர் ஒரு சிலிண்டரை முன்பதிவு (Booking) செய்த தேதியிலிருந்து 45 நாட்கள் கடந்த பின்னரே, அடுத்த சிலிண்டருக்கான முன்பதிவைச் செய்ய முடியும். தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் சூழல் மற்றும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தடங்கல்களால் நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் அறிவிப்பால் கிராமப்புற மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். “பொதுவாக ஒரு மாத காலத்திற்குள்ளேயே சிலிண்டர் தீர்ந்துவிடும் நிலையில், 45 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக அமையும்” எனச் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் தற்போது பல்வேறு பகுதிகளில் காஸ் ஏஜென்சிகளின் முன் சிலிண்டர்களுடன் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விநியோகச் சிக்கல் எப்போது சீராகும் என்பது குறித்து பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பில் இதுவரை உறுதியான தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை
