மகா கும்பமேளாவில் பாசிமணி விற்றுக் கொண்டிருந்த மோனலிசா, தனது வசீகர கண்களால் சமூக வலைதளங்களில் ஒரே நாளில் தேசம் முழுவதும் பிரபலமானார். ரசிகர்கள் மொய்க்கத் தொடங்கியதால் பாதுகாப்பு கருதி சொந்த ஊருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னாளில் சினிமா மற்றும் கடை திறப்பு விழாக்கள் எனப் புகழின் உச்சிக்கு சென்றார்.
இந்நிலையில், மோனலிசாவும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஃபர்மான் கான் என்பவரும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு மோனலிசாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முயன்றனர்.தங்கள் காதலுக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சிய இந்த ஜோடி, பாதுகாப்பிற்காக கேரளாவைத் தேர்ந்தெடுத்தனர்.
திருவனந்தபுரத்தின் பூவாரில் படப்பிடிப்பில் இருந்த மோனலிசா, தனது காதலனுடன் காவல் நிலையத்திற்குச் சென்று பாதுகாப்பு கோரி புகார் அளித்தார். பின்னர், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து தனது காதலன் ஃபர்மான் கானை அவர் முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு கேரள அரசு முழு பாதுகாப்பு அளிப்பதாக உறுதி அளித்துள்ளது.இந்த திருமண விழாவில் கேரள அமைச்சர் சிவன்குட்டி மற்றும் சிபிஎம் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அப்போது பேசிய அமைச்சர் சிவன்குட்டி, “இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி; சுதந்திரமாக வாழ்வதற்கு கேரளா ஒரு சிறந்த இடம்” என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். நாராயண குருவால் கட்டப்பட்ட ஒரு கோவிலைத் தேர்ந்தெடுத்து இவர்கள் மணம் முடித்ததை எம்.வி. கோவிந்தன் பாராட்டிப் பேசினார்.
