குஜராத்தின் ஜெத்பூர் பகுதியில் கடந்த 20 நாள்களுக்குள் அடுத்தடுத்து இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஜெத்பூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில், 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன், தனது 6 வயதுடைய சித்தப்பாவின் மகளை விளையாடுவதாகக் கூறி வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளான். அங்கு, அச்சிறுமியைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான். அச்சத்தில் சிறுமி இதனை யாரிடமும் சொல்லவில்லை.
சம்பவம் நடந்து 15 நாள்கள் கழித்து, சிறுமிக்குத் தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உணவு உட்கொள்ள முடியாமல் சிறுமி அவதிப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 14 வயது சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே பகுதியில், கடந்த 20 நாள்களுக்கு முன்பும் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. 5 வயது சிறுமி ஒருவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் ஜிதேந்திரா என்ற ஜித்து போஜானி என்பவரது வீட்டிற்கு விளையாடச் செல்வது வழக்கம். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ஜிதேந்திரா, சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியுள்ளான். வீட்டிற்குத் திரும்பிய சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததைக் கண்டு சந்தேகமடைந்த தாய், அவரிடம் விசாரித்தபோது கொடூர உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, ஜிதேந்திரா கைது செய்யப்பட்டான்.
மேலும் ஒரே பகுதியில் குறுகிய இடைவெளியில் இரு சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளது. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
