சென்னை ஆழ்வார்பேட்டையில் வசிக்கும் நடிகை சொர்ணமால்யாவின் வீட்டிற்கு, இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அலுவலகத்திற்கு நேற்று மதியம், “ஆழ்வார்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள நடிகை சொர்ணமால்யாவின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது” எனும் உள்ளடக்கத்துடன் ஒரு இ-மெயில் வந்துள்ளது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் உடனடியாக அந்த வீடு நோக்கி புறப்பட்டனர். ஆனால், அதிகாரிகள் நடிகையுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டபோது, “நீங்கள் உண்மையில் காவல்துறையினரா?” என நடிகை சந்தேகம் எழுப்பியதாகத் தெரிகிறது. போலீசார் தங்களது அடையாளத்தை விளக்கியும், நடிகை அதை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போலீசார் நேரில் சென்று செக் செய்ய முனைந்த போதும், அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததாக தெரிகிறது. அக்கம் பக்கத்தினர், “சில நிமிடங்களுக்கு முன்தான் பூட்டி வெளியே சென்றுள்ளனர்” என தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் நடிகையின் குடும்பத்தினர் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே அந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு பகுதிக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சோதனை நடத்திய நிலையில் அது வெறும் புரளி என்பதும் தெரியவந்தது..

இதேபோன்று, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் டிஜிபி நடராஜ், ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, முன்னாள் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரது வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த வீடுகளில் எங்கும் வெடிகுண்டு கண்டறியப்படவில்லை.இது தொடர்பாக மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து, போலீசார் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.