வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகமெங்கும் தற்காலிக பட்டாசு விற்பனைக்கடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் நடவடிக்கையும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க தீயணைப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம், காவல் துறை உள்ளிட்ட சார்ந்த பிரிவுகளின் அனுமதி கட்டாயம். இதில் முதற்கட்டமாக தீயணைப்பு துறையின் சான்றிதழ் பெறப்பட வேண்டியது அவசியம். அதனையடுத்து மற்ற துறைகளிடமிருந்து சான்றுகள் பெற முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, தீயணைப்பு துறைக்கு மாநிலமெங்கும் 6,578 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. இவைகளில் 4,390 கடைகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்கள் தொடர்பான பரிசீலனை அடுத்த 10 நாட்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள், இணையதளத்தின் மூலம் பெறப்பட்டு, தாமதம் இல்லாமல், நேரத்தில் அனுமதிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், போதிய பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் எனவும் தீயணைப்பு துறை விளக்கியுள்ளது.
அத்துடன், வெடிபொருள் சட்டத்திற்கிணங்க, அனுமதி பெற்ற கடைகளின் இடங்கள் நேரில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தொலைவு மற்றும் அடர்த்தி குறித்த நடைமுறைகள் ஆகியவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கல்யாண மண்டபங்கள், கேளிக்கை அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை எனவும், பண்டிகை நெருங்கும் நிலையில், விண்ணப்பங்கள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
