தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நேற்று உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில் நீடித்து வருகிறது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (நவ. 25) தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதற்கடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுவடையலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (நவ. 24) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாகப்பட்டினம், விருதுநகர், கரூர் , அரியலூர்,  இராமநாதபுரம், திருச்சி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.