ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 1.63 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹15,200 கோடி) என்ற பிரம்மாண்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்த அதிரடி உரிமையாளர் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த ஏலப் போட்டியில் இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களான பிர்லா குழுமம் மற்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. இருப்பினும், பெரும் போட்டிக்கு இடையே அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கூட்டமைப்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைக் கைப்பற்றியது. தொழில்நுட்பத் துறை தொழிலதிபர் கல் சோமானி (Kal Somani) தலைமையிலான இந்தக் குழுவில், உலகின் முன்னணி விளையாட்டு மற்றும் தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்:
கல் சோமானி ‘இன்ட்ரா எட்ஜ்’ (IntraEdge) நிறுவனத்தின் நிறுவனரும், ஏஐ (AI) நிர்வாகத் துறையின் முன்னோடியுமான இவர் இந்தக் கூட்டமைப்பை வழிநடத்துகிறார். வால்மார்ட் (Walmart) சாம்ராஜ்யத்தின் ராப் வால்டன் இக்குழுவின் முக்கிய முதலீட்டாளராக உள்ளார். ஃபோர்டு மற்றும் ஹாம்ப் குடும்பத்தினர்: அமெரிக்காவின் புகழ்பெற்ற என்.எஃப்.எல் (NFL) தொடரின் ‘டெட்ராய்ட் லயன்ஸ்’ அணியின் உரிமையாளர்களான ஷீலா ஃபோர்டு ஹாம்ப் மற்றும் ஹாம்ப் குடும்பத்தினர் இதில் இணைந்துள்ளனர்.
மேலும் முதல் ஐபிஎல் தொடரின் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவின் பெரும் கோடீஸ்வரர்கள் வாங்கியிருப்பது, சர்வதேச விளையாட்டு சந்தையில் ஐபிஎல் தொடர் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது. உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க விளையாட்டு வம்சாவளியினர் தற்போது இந்திய கிரிக்கெட்டில் தடம் பதித்துள்ளது விளையாட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் 2026 ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
