தெலுங்கானா மாநிலத்தில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘ஹைட்ரா’ என்ற சிறப்புப் படை, நாஜி சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரின் கொள்கையைத் தழுவி உருவாக்கப்பட்டது என்று அம்மாநில முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி பேசியிருப்பது பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர், ஐதராபாத் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க நபர்கள் பண்ணை வீடுகள் கட்டியும், கழிவுநீர்க் கால்வாய்களை மறித்தும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வருவதைத் தடுக்கவே இந்தத் தனிப்படை உருவாக்கப்பட்டது என்று விளக்கினார்.

அப்போது, ‘ஹைட்ரா’ என்ற வார்த்தை ஹிட்லருக்கு மிகவும் பிடித்தமானது என்றும், யாரையும் வீழ்த்தக்கூடிய அவரது முக்கியக் குழுவின் பெயரால் ஈர்க்கப்பட்டுத்தான் இந்த மாற்றுப் பெயரைக் சூட்டினேன் என்றும் அவர் குறிப்பிட்டது தற்பொழுது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்த ஹிட்லர் ஒப்பீட்டுப் பேச்சுக்கு, அம்மாநில எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியன தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

லட்சக்கணக்கான ஏழை எளிய மக்களின் வீடுகளை இடிப்பதற்கு இத்தகைய சர்வாதிகாரப் போக்கைக் கொண்ட ஹிட்லரையே முதல்வர் முன்மாதிரியாகக் கொண்டுள்ளார் என்றும், இது காங்கிரஸ் கட்சியின் பாசிச மற்றும் நெருக்கடி நிலை மனநிலையை வெளிப்படுத்துகிறது என்றும் பிஆர்எஸ் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் மற்றும் மத்திய அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர் சாடியுள்ளனர்.

மேலும், மக்களாட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதல்வர், வரலாற்றுச் சதிகாரனைப் பெருமையாகப் பேசியதற்காகத் தெலுங்கானா மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.