திருமணத்திற்கு முன்பு இருவர் சம்மதத்துடன் வைத்துக் கொள்ளும் உடலுறவு, ஒருவரின் ‘கெட்ட நடத்தைக்கு’ சான்றிதழாகவோ அல்லது அவரது ஒழுக்கத்தின் மீதான கரும்புள்ளியாகவோ மாறாது என்று உச்ச நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கஜுலா திருப்பதி என்ற இளைஞர் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது கடந்த 2015-ஆம் ஆண்டு பக்கத்து வீட்டுப் பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) மூலம் சமரசமாக முடிக்கப்பட்டது.

இந்த விபரத்தை திருப்பதி தனது விண்ணப்பத்தில் நேர்மையாகக் குறிப்பிட்டிருந்தும், போலீஸ் தேர்வு வாரியம் அவரை ‘ஒழுக்கக்கேடானவர்’ எனக் கூறி வேலை வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தேர்வு வாரியத்தின் இந்த தன்னிச்சையான முடிவைக் கடுமையாகச் சாடியதோடு, திருப்பதிக்கு மீண்டும் வேலை வழங்க உத்தரவிட்டது.

இன்றைய நவீன சூழலில், திருமணத்திற்கு முந்தைய உடலுறவு என்பது இருதரப்பு சம்மதத்துடன் நடக்கும் பட்சத்தில் அது இயல்பான ஒன்று என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. வயது வந்த இருவர் தங்களுக்குள் உறவு வைத்துக் கொள்வதைத் தடுக்க இந்தியாவில் எந்தச் சட்டமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், “அனைத்து காதல் உறவுகளும் திருமணத்தில் தான் முடிய வேண்டும் என்ற அவசியமில்லை.

ஏதோ ஒரு காரணத்தால் காதல் தோல்வியில் முடிந்தால், உடனே ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை ஏமாற்றிவிட்டதாகக் கருத முடியாது. லோக் அதாலத்தில் சமரசம் செய்து கொண்டதை, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தேர்வு வாரியம் தவறாகப் புரிந்துகொண்டுள்ளது என்று தெளிவுபடுத்தினர். தேர்வு வாரியத்தின் இந்த பிற்போக்கான மனநிலையைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த உத்தரவை உறுதி செய்து, அந்த இளைஞருக்குப் பணி நியமனம் வழங்க உத்தரவிட்டுள்ளது.