சமூக வலைதளங்களின் மோகமும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்யும் வெறியும் ஒரு குடும்பத்தையே எப்படி நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது என்பதற்கு சாட்சியாக உத்திரபிரதேச மாநிலம், ஷ்ரவஸ்தி பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது பகவான்பூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதே முழுநேர வேலையாக இருந்துள்ளது. இதனால் குடும்பத்தையும், குழந்தைகளையும் அவர் கவனிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த அவரது கணவர், “ஊர் உலகம் என்ன சொல்லும்? பிள்ளைகளைக் கவனி” என்று கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தைப் பார்த்து, மூன்று அப்பாவி குழந்தைகளையும் தவிக்க விட்டுவிட்டு, வீட்டில் இருந்த 90 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் விலைமதிப்பற்ற நகைகளுடன் தனது கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.
தற்போது மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அந்த கணவர் தவித்து வருகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள கணவர், “அவள் தன் விருப்பப்படி கள்ளக்காதலனுடன் வாழட்டும், அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், என் ரத்த வியர்வை சிந்தி உழைத்த பணத்தையும், நகைகளையும் மீட்டுத் தர வேண்டும்.
மேலும், எதிர்காலத்தில் அவள் ஏதேனும் தவறான முடிவெடுத்து உயிரிழக்க நேரிட்டால், அதற்கு நான் பொறுப்பல்ல என்பதை போலீஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் என்று வினோதமான கோரிக்கையை வைத்துள்ளார். ரீல்ஸ் விவகாரத்தில் மனைவி கள்ளக்காதலனுடன் ஓடியதும், கணவனின் இந்த அதிரடி கோரிக்கையும் அப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
