தெலுங்கானா மாநிலம், மேடக் நகர் ராணுவ குடியிருப்பில் வசித்து வந்த ராணுவ வீரர் பொன்னம் குமார் கவுட் (49), குடும்பத் தகராறு மற்றும் கள்ளக்காதல் விவகாரத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்டில் பணிபுரிந்து வந்த இவர், ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது அவருக்கும், அவரது மனைவி பத்மாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பத்மா கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் வீட்டுக்கு வந்த அவர் மனைவி இல்லாத நேரத்தில், இரண்டு பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார். இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் பத்மாவிற்கு உடனடியாக தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து ஆத்திரமடைந்த பத்மா, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரருடன் நள்ளிரவில் கணவரின் வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார். அங்கு பெண்களுடன் கணவர் உல்லாசமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே, ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற பத்மா மற்றும் அவரது குடும்பத்தினர், ராணுவ வீரர் பொன்னம் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோபத்தில் கணவரைக் கொலை செய்துவிட்டோமே என்று பத்மா கதறித் துடித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, பத்மா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.