நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் 28-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் தொடரிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது இரண்டு பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இதில் ஒரு பெண் 18 வயதிற்குட்பட்ட சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்ட ரீதியான சிக்கல்களில் யாஷ் தயாள் சிக்கியுள்ள நிலையில், அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆர்சிபி அணியின் நிர்வாக இயக்குனர் கூறுகையில்,
“தனிப்பட்ட காரணங்களுக்காக யாஷ் தயாள் இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது முடிவை அணி நிர்வாகம் மதிக்கிறது,” எனத் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஏலத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் அணியில் சேர்க்கப்பட்ட யாஷ் தயாள், தொடர் ஆரம்பிக்கும் முன்பே விலகியுள்ளது ஆர்சிபி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குப் பதிலாக மாற்று வீரர் யார் என்பது குறித்த அறிவிப்பை அணி நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
