தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை காலை 10 மணிக்குப் பதவியேற்க உள்ள தவெக தலைவர் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒரு முக்கியமான நிபந்தனையை விதித்துள்ளார்.
அதன்படி, வரும் மே மாதம் 13-ம் தேதிக்குள் சட்டமன்றத்தில் தனது அரசுக்கான பெரும்பான்மையை முறைப்படி நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது விசிக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு 120 எம்.எல்.ஏ-க்களின் பலம் தவெக வசம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதைச் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் விஜய்க்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர் பதவிகள் மற்றும் விசிக-வின் வன்னி அரசுக்கு அமைச்சரவையில் இடம் எனப் பல கணக்குகளுடன் ஆட்சி அமையவுள்ள நிலையில், ஆளுநர் கொடுத்துள்ள இந்த குறுகிய கால அவகாசம் அரசியல் களத்தில் அனலைக் கிளப்பியுள்ளது.
இதனால் நாளை பதவியேற்பு முடிந்த கையோடு, அடுத்த சில நாட்களில் சட்டமன்றத்தைக் கூட்டி தனது பலத்தை நிரூபிப்பதற்கான வேலைகளில் விஜய் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் இப்போதே தீவிரமாக இறங்கியுள்ளனர்.
