தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நாளை (மே 10) காலை 10 மணிக்கு விஜய் பதவியேற்க உள்ள நிலையில், அவருடன் சேர்ந்து முதற்கட்டமாக 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், தவெக-வின் முக்கிய நிர்வாகிகளுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, செங்கோட்டையன் (பொதுப்பணித்துறை), என். ஆனந்த் (நகராட்சி நிர்வாகம்), சி.டி.ஆர். நிர்மல் குமார் (மின்சாரம்), ஆதவ் அர்ஜுனா (விளையாட்டு மற்றும் மதுவிலக்கு), ராஜ்மோகன் (ஆதி திராவிடர் நலம்), முஸ்தபா (சிறுபான்மையினர் நலம்), அருண்ராஜ் (பத்திரப்பதிவு), மற்றும் வெங்கட் ரமணன் (பள்ளிக் கல்வி) ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக இன்று மாலை ஆளுநரைச் சந்தித்த விஜய், தனது கட்சியின் 107 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இந்த அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடமளிக்கப்பட உள்ள போதிலும், இலாகா ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அவர்கள் பின்னர் பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது. அதேசமயம் விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயுஎம்எல் ஆகிய கட்சிகள் அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகவும், அமைச்சரவையில் இடம்பெறப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளன.

இதற்கிடையே, மே 13-க்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என விஜய்க்கு ஆளுநர் கெடு விதித்துள்ளதால், பதவியேற்பு முடிந்த கையோடு பலப்பரீட்சைக்கும் தவெக அரசு தயாராகி வருகிறது.