அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன், கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இ.பி.எஸ்.) இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ள இந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கோட்டையன் ஏற்கெனவே இ.பி.எஸ்-க்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்த நிலையில், நேற்று அவர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.), டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பசும்பொன்னுக்குச் சென்றது கட்சியினுள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
செங்கோட்டையன் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயல்பட்டதாலும், இ.பி.எஸ்-க்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியாகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்கி வந்த செங்கோட்டையன் நீக்கப்பட்டிருப்பது, கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க., கட்சிக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது தயக்கம் இன்றி கடும் நடவடிக்கை எடுத்து வருவதை இந்தச் சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
