பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 69 பக்கங்கள் கொண்ட இந்த ‘சங்கல்ப பத்திரம் 2025’ ஆவணத்தில் 25 முக்கிய உறுதிமொழிகள் இடம்பெற்றுள்ளன.

1 கோடி அரசு வேலைகள், இலவசக் கல்வி, ஏழு விரைவுச்சாலைகள், 10 தொழிற்பேட்டைகள், நான்கு புதிய மெட்ரோ ரயில்கள், உயர்கல்வி பயிலும் தலித் மாணவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பீகார் துணை முதல்வர் சம்ராட் சௌத்ரி கூறுகையில், “திறன் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மெகா கற்றல் மையங்கள் அமைக்கப்பட்டு பீகாரை உலகளாவிய கல்வி மையமாக மாற்றுவோம்” என்றார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன. டிஎம்கே எம்பி தயாநிதி மாறன், “என்டிஏ அறிக்கை தமிழ்நாட்டின் திராவிட மாடல் திட்டங்களைப் பின்பற்றியுள்ளது” எனக் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட், “26 வினாடிகளில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை பொய்களின் தொடர்” என விமர்சித்தார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சிவானில் பிரசாரம் செய்து, “வளர்ச்சிக்கு என்டிஏ ஆட்சி தேவை, நிதீஷ் குமார் தலைமையில் பீகார் முன்னேறும்” என வாக்கு சேகரித்தார். மறுபுறம், மகாகத்பந்தன் அறிக்கையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு அரசு வேலை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.