தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியையும், புதிய கட்சிகளுக்கு உற்சாகத்தையும் அளித்து வருகின்றன. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
ராசிபுரம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்செல்வன், ஆளுங்கட்சியின் முக்கிய முகமான அமைச்சர் மதிவேந்தனை எதிர்த்துப் போட்டியிட்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் இறுதியில், சுமார் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் லோகேஷ் தமிழ்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான இவர், தனது தந்தையின் அரசியல் அனுபவம் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் மக்கள் செல்வாக்கை ஒருங்கிணைத்து இந்த வெற்றியைச் சாத்தியமாக்கியுள்ளார்.
தேர்தலில் அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் அவர் மிகவும் உருக்கத்துடன் ஜெயலலிதா அம்மையார் இருந்திருந்தால் எனக்கு இதுபோன்று ஒரு நிலை வந்திருக்காது என வேதனையுடன் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் பலமான முத்திரையைப் பதித்துள்ளது:
திரு.வி.க. நகர்: தவெக வேட்பாளர் பல்லவி அவர்கள் தொகுதி மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்றுள்ளார். சைதாப்பேட்டை: திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார். காரைக்குடி: இத்தொகுதியில் தவெக வேட்பாளர் பிரபு வெற்றி பெற்றுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தோல்வியைத் தழுவினார்.
தருமபுரி தொகுதியில் அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வெற்றி பெற்று தனது செல்வாக்கைத் தக்கவைத்துள்ளார். உதகமண்டலம் தொகுதியில் பாஜக வேட்பாளர் போஜராஜன் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், அமைச்சர்களையே வீழ்த்தும் அளவிற்கு செல்வாக்கு பெற்றுள்ளது தமிழக அரசியலில் புதிய சகாப்தத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. தவெக தலைவர் விஜய் அவர்களின் நேரடி வழிகாட்டுதலில் களம் கண்ட வேட்பாளர்கள் பல இடங்களில் முன்னிலை பெற்று வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
