தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில், மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை சந்தித்துள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், இத்தேர்தலில் திமுக வேட்பாளர் சேடப்பட்டி மணிமாறனிடம் 18,000 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியுள்ளார். கடந்த 2021 தேர்தலில் ஆர்.பி.உதயகுமாரிடம் தோல்வியடைந்த மணிமாறன், இம்முறை மிக வலிமையாகத் திரும்பி வந்து தனது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
ஆர்.பி.உதயகுமாரின் இந்தத் தோல்விக்கு, சசிகலா தலைமையிலான அணி சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் ஜீவிதா நாச்சியார் பிரித்த வாக்குகள் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. அவர் அதிமுகவின் வாக்கு வங்கியில் கணிசமான அளவு கைவைத்ததே, ஆர்.பி.உதயகுமாரின் சரிவுக்கு வழிவகுத்ததாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். தென்மாவட்டங்களில் அதிமுகவின் முக்கிய முகமாக விளங்கிய ஆர்.பி.உதயகுமாரின் தோல்வி, அதிமுக முகாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
