“வறுமை என்பது எண்ணற்ற பதக்கங்களை மறைக்கும் ஒரு முக்காடு!” என்று எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்ட ஒரு வாசகத்துடன், எளிய வீட்டு வாசலில் நின்று கொண்டு சிறுமி ஒருவர் செய்த அசாதாரண ஜிம்னாஸ்டிக் வித்தை சமூக வலைதளங்களில் வெளியாகி மில்லியன் கணக்கானோரின் இதயங்களைத் தொட்டு வேகமாக வைரலாகி வருகிறது.

எந்தவொரு பெரிய விளையாட்டு அகாடமியோ, விலையுயர்ந்த உடற்பயிற்சிக் கூடமோ அல்லது அதிநவீன விளையாட்டு வசதியோ இல்லாத ஒரு எளிய கிராமத்துச் சூழலில், அந்தச் சிறுமி தனது வீட்டின் கதவுச் சட்டத்தை இறுகப் பிடித்துக்கொண்டு, பயமோ தயக்கமோ இன்றித் தன் உடலைப் பல்வேறு கோணங்களில் வளைத்துஊஞ்சலாடி காட்டிய அசாத்திய அசைவுகளும், அவளது அசாத்திய உடல் கட்டுப்பாடும் விளையாட்டு வல்லுநர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

“>

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “திறமை என்பது ஒரு நகரத்துடனோ அல்லது ஒரு பணக்காரக் குடும்பத்துடனோ பிணைக்கப்பட்டதல்ல, இந்தச் சிறுமிக்குச் சரியான பயிற்சியும் வாய்ப்புகளும் கிடைத்தால் சர்வதேச அளவில் நாட்டிற்குப் பெருமையைத் தேடித்தருவார்” என்று நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்தச் சிறுமி யார், எந்த ஊர் என்ற விவரங்கள் இதுவரை தெரியாத நிலையிலும், கிராமப்புறங்களில் மறைந்திருக்கும் இதுபோன்ற ஏழை எளிய குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிந்து அவர்களுக்குக் கல்வி உதவித்தொகை மற்றும் முறையான விளையாட்டுப் பயிற்சிகளை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் பலமாக எழுந்துள்ளது.