இந்தியாவில் உள்ள பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்களில் காலை முதல் நள்ளிரவு வரை உழைப்பது, வார இறுதி நாட்களான சனி, ஞாயிறுகளிலும் லேப்டாப்பும் கையுமாக இருப்பதுதான் சிறந்த ஊழியருக்கான அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், ஐரோப்பிய நாடான நார்வேயில் பணிக்குச் சேர்ந்த இந்திய ஊழியர் ஒருவருக்கு, அங்குள்ள மேலாளர் கொடுத்த ‘ஷாக்கிங்’ அட்வைஸ் தற்போது இணையதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த நிகில் கபூர் என்ற மென்பொருள் பொறியாளர், இந்தியாவில் பல ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் வாரத்திற்கு 60 முதல் 70 மணி நேரம் வேலை பார்த்துப் பழகியவர். சமீபத்தில் நார்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றில் சீனியர் டெவலப்பராக அவர் பணியில் சேர்ந்தார்.
அங்கு ஒரு திட்டப்பணிக்கான கடைசி நாள் நெருங்கியதால், தனது இந்திய பாணியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் லேப்டாப்பைத் திறந்து முழு நேரமும் வேலை செய்து முடித்துள்ளார். திங்கள்கிழமை அலுவலகம் சென்ற நிகில், தனது மேலாளரான லார்ஸ் ஆண்டர்சனிடம், “நான் வீக்கெண்டிலும் உழைத்து வேலையை முடித்துவிட்டேன்” என்று பெருமையாகக் கூறியுள்ளார். பாராட்டு கிடைக்கும் என எதிர்பார்த்த நிகிலுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
அவரது மேலாளர் லார்ஸ், “எங்கள் நிறுவனத்தில் வார இறுதியில் வேலை பார்ப்பதை நாங்கள் முற்றிலும் எதிர்க்கிறோம். நீ விடுமுறை நாளில் வேலை பார்க்கிறாய் என்றால், உன்னால் நேரத்திற்குள் வேலையை முடிக்க முடியவில்லை அல்லது எங்கள் நிர்வாகம் உன் மீது அதிக சுமையை ஏற்றியுள்ளது என்று அர்த்தம். இரண்டுமே தவறு. முதல்ல லேப்டாப்பை மூடிட்டு வீட்டுக்குக் கிளம்பி ஓய்வெடு என்று கண்டிப்புடன் கூறியுள்ளார்.
நார்வே உள்ளிட்ட ஸ்காண்டிநேவிய நாடுகளில் ‘வொர்க்-லைஃப் பேலன்ஸ்’ எனப்படும் வேலை-தனிப்பட்ட வாழ்க்கை சமநிலைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அங்கு வாரத்திற்கு 37.5 மணி நேரம் மட்டுமே வேலை. மாலை 5 மணிக்கு மேல் ஊழியர்களைத் தொடர்புகொள்வது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சுவாரசியமான அனுபவத்தை நிகில் கபூர் தனது லிங்க்டின் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இது இந்திய கார்ப்பரேட் ஊழியர்களிடையே காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இரவு 9 மணிக்கு வீட்டிற்குப் புறப்பட்டாலே முறைத்துப் பார்க்கும் இந்திய மேலாளர்கள், நார்வே நாட்டின் இந்த உன்னதமான அலுவலகக் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம்” என்று இந்திய ஊழியர்கள் தங்களது ஆதங்கத்தை இணையத்தில் கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
