இன்றைய இளைஞர்களிடையே கார்ப்பரேட் வேலை, பணிச்சுமை, மேலாளர்களின் அழுத்தம் குறித்து சமூக வலைத்தளங்களில் புலம்புவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. இந்நிலையில், அவ்வாறு எப்போதும் தனது கார்ப்பரேட் வேலையைக் குறை கூறிக்கொண்டே இருப்பவர்களுக்கு மாற்றுப் பார்வையை வழங்கும் வாலிபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இன்ஸ்டாகிராமில் @iron_crafted_life என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்குத் தனது அலுவலக வேலையை முடித்த பின் அந்த வாலிபர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “பலரும் தங்களை மிகவும் திறமையானவர்கள், உழைப்பாளிகள் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில் தங்களுக்குப் பிடிக்காத கார்ப்பரேட் வேலையையும், நிறுவனத்தையும் சபித்துக் கொண்டே இருக்கிறார்கள். உங்களுக்குள் அவ்வளவு திறமையும், கனவும் இருந்தால் ஏன் சொந்தமாகத் தொழில் தொடங்கவோ அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கவோ மாட்டேங்கிறீர்கள்? வெறும் புலம்பலால் மட்டும் எதுவும் மாறிவிடாது” என்று சாடியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், “சமூகத்தில் உள்ள எல்லாராலும் சச்சின் டெண்டுல்கராகவோ அல்லது விராட் கோலியாகவோ மாறிவிட முடியாது. அதேபோல எல்லாரும் பெரிய கோடீஸ்வர தொழிலதிபராகவும் ஆக முடியாது. பலரும் இங்கு சராசரி  வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்கள், நானும்கூட ஒரு சராசரி மனிதன்தான். நாம் ஒரு சராசரி மனிதன் என்பதை ஏற்றுக்கொள்ள மறுப்பதே நம் ஏமாற்றத்திற்குக் காரணம்” என்று நிதர்சனத்தைக் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், தவறான அலுவலகக் கலாச்சாரத்தையோ அல்லது ஊழியர்களைச் சுரண்டுவதையோ தான் ஆதரிக்கவில்லை என்றும், வேலை உங்கள் மனநலனைப் பாதித்தால் உடனடியாக விலகுவதில் தவறில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். சாதாரணமாக இருக்கும் ஒரு வேலையில் தினசரி குறைகளை மட்டுமே தேடிக்கொண்டிருந்தால் எங்குமே மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்ற இவரது எதார்த்தமான பேச்சு, நெட்டிசன்களிடையே தற்போது பெரும் விவாத அலையைக் கிளப்பியுள்ளது.