டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான குரூப்-எஃப் பிரிவு கால்பந்து போட்டியில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து நாடுகள் மோதின. இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து ஆட்டம் சமனில் (2-2) முடிந்தது. ஜப்பான் வீரர் டைச்சி காமடா கடைசி நேரத்தில் அடித்த கோல் மூலம் ஜப்பான் அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. மைதானத்தில் ஜப்பான் வீரர்களின் ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், போட்டி முடிந்த பிறகு ஜப்பான் நாட்டு ரசிகர்கள் செய்த செயல் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களையும் நெகிழ வைத்துள்ளதுடன் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

போட்டி முடிந்து மற்ற நாட்டு ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய நிலையில், ஜப்பான் ரசிகர்கள் மட்டும் தங்களது நீல நிற குப்பை பைகளுடன் மைதானத்திலேயே தங்கினர். தாங்கள் அமர்ந்திருந்த பகுதி மட்டுமின்றி, மைதானத்தின் பிற பகுதிகளிலும் சிதறிக்கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், உணவுப் பொட்டலங்கள் மற்றும் காகிதக் குப்பைகளை அவர்கள் பொறுப்புடன் அள்ளிச் சுத்தம் செய்தனர்.

 

மேலும் சில இடங்களில் மற்ற நாட்டு ரசிகர்களும் இவர்களுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். போட்டி வென்றாலும், தோற்றாலும் அல்லது சமனில் முடிந்தாலும் மைதானத்தைச் சுத்தம் செய்வதை ஜப்பான் ரசிகர்கள் தங்களது கலாச்சாரமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். போட்டி முடிந்த பிறகும் அவர்கள் காட்டிய இந்த ஒழுக்கமும், சமூகப் பொறுப்பும் இணையதளங்களில் தற்போதைய ட்ரெண்டிங்காக மாறிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.