தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகளில், விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தவெக சார்பில் போட்டியிட்ட இளம் வேட்பாளர் கீர்த்தனா, ஆரம்பம் முதலே தனது அசுர வேக முன்னிலையைத் தக்கவைத்துக் கொண்டு 11,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜி.அசோகன் ஆகியோர் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர்.
தற்போது வரை கிடைத்துள்ள தேர்தல் நிலவரப்படி, தமிழகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய கட்சியாகப் போட்டியிட்டு, முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சிகளின் கோட்டைகளைத் தகர்த்துத் தவெக முன்னிலை பெற்று வருவது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
