கோடைக் காலத்தில் நாடு முழுவதும் மின்சாரப் பயன்பாடு மற்றும் கட்டணம் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் சோலார் பேனல் அமைப்பதற்கான ஆர்வம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘பிரதமர் சூர்ய கர் யோஜனா’ திட்டத்தின் கீழ் தற்போது ஒரு முக்கிய அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மத்திய அரசின் நிதி உதவி மானியத்தைப் பெற விரும்பாத நுகர்வோர், ‘அதை கைவிடும்’ புதிய விருப்பத்தைத் தேர்வு செய்யலாம் என மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தேர்வைச் செய்யும் நுகர்வோர், உள்நாட்டுத் தயாரிப்பு அல்லாத சோலார் பேனல்களையும் தங்களின் வீடுகளில் எளிதாகப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு சோலார் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஜூன் 1, 2026 முதல் சூரிய ஒளிமின்கலங்களுக்கான கடுமையான ALMM பட்டியல்-2 விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டன. இருப்பினும், எரிசக்தித் துறை எழுப்பிய கேள்விகளைத் தொடர்ந்து, தற்போது புதிய தளர்வை அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மானியத்தைக் கைவிடும் குடியிருப்பு நுகர்வோருக்கு மட்டும் இந்த ALMM மற்றும் DCR விதிகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த அதிரடிச் சலுகை வரும் மார்ச் 31, 2027 வரை அமலில் இருக்கும் என்றும், குடியிருப்பு அல்லாத பிற சோலார் திட்டங்களுக்குப் பழைய விதிகளே தொடரும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. நுகர்வோருக்கு சோலார் பேனல்களைத் தேர்ந்தெடுப்பதில் கூடுதல் சுதந்திரத்தையும், நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த முடிவு, வீடுகளில் சூரிய ஆற்றல் அமைப்புகளை நிறுவும் வேகத்தை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
