உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் பல கட்டங்களைத் தாண்டி நீடித்து வரும் வேளையில், தற்போது உக்ரைன் ராணுவ வீரர்களைக் குறிவைத்து ரஷ்யா ஒரு ஆபத்தான ‘ஹனி ட்ராப்’ (காம வலை) உத்தியைக் கையாண்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டு இளம் பெண்களையே பகடைக்காயாகப் பயன்படுத்தி, சமூக ஊடகங்கள் மூலம் அந்நாட்டு ராணுவ வீரர்களைக் கவர்ந்து, அவர்களின் இருப்பிடம் மற்றும் ரகசியத் தகவல்களை ரஷ்யா திருடி வருவதாக உக்ரைன் போலீஸ் உயரதிகாரி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தியுள்ளார். போர்முனையில் நேரடியாக மோதுவதைத் தாண்டி, வீரர்களின் பலவீனங்களைப் பயன்படுத்தி அவர்களைச் சதித்திட்டத்தின் மூலம் வீழ்த்த ரஷ்யா இந்தத் தந்திரத்தைக் கையாள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சதிவலையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் எளிதாக சிக்கிக்கொள்வதாகவும், தங்களை அறியாமலேயே ராணுவ ரகசியங்களை அந்தப் பெண்களிடம் பகிர்ந்து ஆபத்தை விலைக்கு வாங்குவதாகவும் உக்ரைன் காவல் துறை எச்சரித்துள்ளது. காதல் வயப்படுவது போலவும், நட்பு பாராட்டுவது போலவும் பழகும் இந்த இளம் பெண்கள், உண்மையில் ரஷ்ய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் போது ராணுவ வீரர்கள் தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், முன்பின் தெரியாத பெண்களின் கணக்குகளில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கக் கூடாது என்றும் உக்ரைன் பாதுகாப்புப் படை கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.