“அமைச்சர்களோட பிஏ-க்கள் பண்ற அலும்புக்கு அளவே இல்லாம போச்சு சார்!” என திமுக தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ள அறிக்கை அறிவாலய வட்டாரங்களை அதிர வைத்துள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை அக்குவேறான ஆணிவேறாக அலசியுள்ள இந்தக் குழு, கட்சியின் சீனியர்கள் மற்றும் அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான பகீர் புகார்களைப் பட்டியலிட்டுள்ளது. குறிப்பாக, பொதுமக்களும் அடிமட்டத் தொண்டர்களும் தங்களது குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல முடியாதபடி, அவர்களுக்குக் கீழே இருக்கும் உதவியாளர்கள் (PA) பெரும் முட்டுக்கட்டையாக இருந்ததே மக்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் கோபத்திற்கு முக்கியக் காரணம் என இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி தகுதியான அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை போய் சேராததால் பெண்கள் மத்தியில் திமுக அரசு மீது அசைக்க முடியாத அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அறங்காவலர் குழு நியமனங்களில் உண்மையான விசுவாசிகளுக்குப் பதவி தராமல் அமைச்சர் சேகர்பாபுவுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வாரி வழங்கப்பட்டதாகக் காரசாரமான குற்றச்சாட்டுகள் இந்த அறிக்கையில் அம்பலமாகியுள்ளதால், தோல்வி அதிர்ச்சியில் இருக்கும் திமுக தலைமைக்கு இந்த அறிக்கை பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
