தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில் இணையுமாறு முதல்வர் விஜய்க்கு வைக்கப்பட்ட கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கூட்டணியைப் புறக்கணித்ததற்கு தவெக தரப்பில் நாடாளுமன்ற எம்பிக்கள் இல்லாததே காரணம் என்று காங்கிரஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கமளிக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் பலத்த அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுடன் கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்துள்ள காங்கிரஸிற்கு, தங்களுக்குக் கிடைத்த முதல் ராஜ்யசபா எம்பி சீட்டை முதல்வர் விஜய் விட்டுக்கொடுத்தார்.
மத்திய பாஜக அரசின் நாடாளுமன்ற நடவடிக்கைகளின் போது நேரடியாக எதிர்த்து வாக்களிக்கும் சூழ்நிலையைத் தவிர்த்து, அரசியல் ரீதியாகச் சமநிலையைப் பேணவே தவெக இந்த ராஜ்யசபா சீட்டை காங்கிரஸிற்குத் தாரை வார்த்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய சூழலில் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் தமிழக அரசுக்கு, மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்களுக்கான அனுமதிகள் தடையின்றி கிடைக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியைக் கூட்டணியில் சேர்த்துக் கொண்டதாலேயே மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பதில் சவால்கள் நீடிக்கும் நிலையில், இந்தியா’ கூட்டணியில் இணைந்தால் மத்திய பாஜக அரசின் நேரடி எதிர்ப்பைச் சம்பாதிக்க நேரிடும் எனத் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் முதல்வரின் ஆலோசகர் எச்சரித்துள்ளனர். ஆரம்பக்கட்டத்திலேயே மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தால் மாநில நிர்வாகப் பணிகள் முடங்கும் என்பதால், பாஜகவுக்கு எதிரான நேரடி முத்திரையைத் தன்மீது குத்திக்கொள்ள முதல்வர் விஜய் விரும்பவில்லை. இதனால், மத்திய அரசுடன் இணக்கமான போக்கைப் பேணி நிர்வாகத்தைச் சீரமைக்கும் நோக்கில், ‘இந்தியா’ கூட்டணியில் இணையும் காங்கிரஸ் அழைப்பைத் தவெக தலைமை இப்போதைக்குத் தள்ளிவைத்துள்ளதாக உளவுத்துறை மற்றும் அரசியல் நோக்கர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.
