திருப்பூர்: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று காலை 10 மணிக்கு உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, பல துறைகளின் அரசு நலத்திட்ட உதவிகளை மக்களிடம் வழங்கினார்.

வருவாய்துறை, ஊராட்சி துறை, மகளிர் திட்டம், தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 19,785 பேருக்கு ரூ.295 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழாவில் உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், “திராவிட மாடல் அரசின் கீழ் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜின் அயராத உழைப்பே காரணம்” என பாராட்டினார். மேலும், அதிமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சியில் திருப்பூருக்கு ரூ.10,491 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.

“மேற்கு மண்டல வளர்ச்சியில் நம்ம திராவிட மாடல் ஆட்சியே சாதனை படைத்துள்ளது; 2026 தேர்தலில் அதிமுகவின் தோல்வி மேற்கு மண்டலத்திலிருந்து தொடங்கும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி குறித்து பேசும் போது, “சுந்தரா டிராவல்ஸ் பஸ்சை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று பொய்யுரைப்பது, ஸ்டாலின் திட்டம் மக்களிடையே ஹிட் ஆனதால் அவருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டுள்ளது” என சாடினார். மேலும், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அரசுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது, இது அதிமுகவுக்கு அவமானம் அல்லவா? என்று கேள்வி எழுப்பினார். “தமிழ்நாட்டில் திராவிட மாடல் நல்லாட்சி எந்நாளும் தொடரும்” என்று உறுதியாக தெரிவித்தார்.