தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தற்போதே தயாராகி வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளும் பரபரப்பாக நடைபெறுகிறது. தேமுதிக அதிமுக கூட்டணியில் நீடிப்பதாக கூறப்பட்ட நிலையில் ஜனவரி மாதம் நடைபெறும் தேமுதிக பொதுக்குழு கூட்டத்தின் போது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அதாவது ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் அதிமுக மீது தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக நீடிப்பதாக கூறினார். அதே நேரத்தில் சமீப காலமாக திமுகவுடன் தேமுதிக நெருக்கம் காட்டி வருவதால் கூட்டணி மாற வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டது.
இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் வெளிவரும். அதற்கு முன்பாக தமிழ்நாடு முழுவதும் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளர் எல்.கே சதீஷ் தற்போது ஜெயலலிதாவுடன் பிரேமலதா விஜயகாந்த் இருப்பது போன்ற ஒரு போட்டோவை தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த போட்டோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. மேலும் அதிமுகவுடன் கூட்டணியில் தொடர்வதை மறைமுகமாக குறிப்பிட்டதன் இப்படி ஒரு போட்டோவை அவர் வெளியிட்டுள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருபுறம் விஜய் அல்லது திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படும் நிலையில் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் அவர்கள் நீடிப்பதாக அந்த கட்சியின் தலைவர்கள் கூறுகிறார்கள். மேலும் தற்போது வெளிவந்த போட்டோவும் அதனை உறுதிப்படுத்துவது போல் இருப்பதால் பரபரப்பாக பேசப்படுகிறது.
