திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற வேளாண் பொருட்காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சேத்துப்பட்டு பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக கலசப்பாக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவச்சிலையைத் திறந்து வைத்த முதல்வர், பின்னர் சேத்துப்பட்டு பகுதிக்கு வருகை தந்தார்.
அப்போது சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் உமர் என்ற மாணவன், முதல்வரை நேரில் சந்தித்து தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வழங்கினார்.
அந்தக் கடிதத்தில், தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் தானும் தனது சக மாணவ, மாணவிகளும் பெரும் பயன் அடைந்து வருவதாகக் குறிப்பிட்டு, இத்திட்டத்தைக் கொண்டு வந்த முதல்வருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதாக அந்த மாணவன் எழுதியிருந்தார்.
சிறுவன் உமரின் இந்த நெகிழ்ச்சியான செயலைப் பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரிடமிருந்து கடிதத்தைப் பெற்றுக்கொண்டதோடு அந்த மாணவனுக்குத் தனது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
