சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ விசித்திரமான மற்றும் ஆபத்தான சாகச வீடியோக்கள் வைரலாகி வந்தாலும், தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கும் ஒரு காட்சியைக் கண்டால் நெஞ்சே அடைத்துவிடும்.

உயரமான கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் முதியவர் ஒருவர் ஆபத்தான முறையில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள வீடியோதான் தற்பொழுது இன்டர்நெட்டை உலுக்கி வருகிறது. பால்கனிக்கு வெளியே அமைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தற்காலிக அமைப்பின் மீது நின்று கொண்டு அவர் வெற்றிடத் தூய்மையாக்கியைக்  கொண்டு சுத்தம் செய்யும் விதம் காண்போரை நடுங்க வைத்துள்ளது.

இந்த விபரீதமான துப்புரவுப் பணியின் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், ஆபத்தான அந்த உயரத்தில் நின்று கொண்டிருக்கும் கணவரை, அவரது மனைவியோ எந்தவிதப் பாதுகாப்பும் இன்றிப் பின்னால் இருந்து வெறும் கைகளால் பிடித்துக் கொண்டிருப்பதுதான். எந்த நேரத்திலும் நிலைதடுமாறி கீழே விழக்கூடும் என்ற அபாயகரமான சூழல் நிலவினாலும், சற்றும் அச்சமின்றி அந்த மூதாட்டி காட்டியிருக்கும் அதீத நம்பிக்கை இணையவாசிகளிடையே கடும் விமர்சனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபத்தான சாகசக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், “ஆண்ட்டியின் டிரஸ்ட் லெவல் நூறு சதவீதம் என்றால், பாதுகாப்பு முறை மைனஸில் உள்ளது” என்று தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், முதியவர்கள் இதுபோன்று உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.