இந்தியாவில் அண்மைக்காலமாக நடைபெற்று வரும் CJP போராட்டங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ள நிலையில், நாட்டில் வசிக்கும் வெளிநாட்டு யூடியூப் விளாகர்கள் இது குறித்து அமைதி காப்பது ஏன் என்பதற்கான காரணத்தை விளக்கியுள்ளனர்.
இந்தியாவில் தங்கியிருந்து தங்களின் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வரும் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல விளாகர்கள், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் போராட்டச் சூழல்கள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்று இணையவாசிகளும் அவர்களின் பின்தொடர்பாளர்களும் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நடத்தும் அமெரிக்க விளாகரான லிஸ் ‘ஜந்தர் மந்தர் போராட்டங்களுக்குப் பின்னாலுள்ள மௌனம்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இந்தியா தனது இரண்டாவது வீடு போன்றது என்று குறிப்பிட்ட அவர், இந்தியக் குடிவரவு மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின்படி இங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு அரசியல் போராட்டங்களில் பங்கேற்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ பேச்சுரிமை இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.
இத்தகைய விவகாரங்களில் வெளிநாட்டினர் தலையிட்டால் அவர்களின் விசா ரத்து செய்யப்படுவது, நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றப்படுவது, கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவது மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற நேரிடுவது போன்ற தீவிர சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்றும், அதனால் தான் அமைதி காப்பதாகவும் தெரிவித்து “ஜெய் ஹிந்த்” எனக் கூறி விடைபெற்றுள்ளார்.
இதேபோல, ‘ஓசி பாய்’ என அழைக்கப்படும் ஆஸ்திரேலிய விளாகரான ஆண்டி எவன்ஸ் ‘Why’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதையே வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்பும் அரசியல் விவகாரங்களில் கருத்து தெரிவித்த வெளிநாட்டினர் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தியாவில் வாழும் பிற வெளிநாட்டு நபர்களும் இத்தகைய உள்ளூர் அரசியல் போராட்டங்கள் குறித்து எந்தவொரு கருத்துகளையும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
See this Instagram video by @lizandshiv https://t.co/ngNSFxqMiP
“>
