கன்னடத்தில் இயக்குனர் சந்துருவின் இயக்கத்தில் வெளியான கப்ஜா படம் பான் இந்தியா படமாக இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தில் உபேந்திரா, ஸ்ரேயா சரண் மற்றும் முரளி சர்மா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். கிச்சாசுதீப் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள நிலையில், அவர்களின் வருகை 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் தற்போது கப்ஜா படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம். அதாவது படம் 1945-ம் ஆண்டு கால கட்டத்தில் தொடங்கி 1971-ல் நடைபெறும் காட்சிகளாக எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரரின் மகனான உபேந்திரா எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார் என்பதே படத்தின் கதை. நடிகை ஸ்ரேயாவுக்கு படத்தில் பெரிய அளவில் காட்சிகள் இல்லை. ஒரு சில காட்சிகளில் ஸ்ரேயா வந்தாலும் இன்னமும் இளமை அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார். விமானப்படையில் பயிற்சி முடித்துவிட்டு சொந்த ஊருக்கு செல்கிறார் உபேந்திரா. அவர் வாழும் அமராபுரம் மற்றும் பிற இடங்களில் சுதந்திரப் போராட்டத்திற்கு பிறகு பகதூர் சாம்ராஜ்யத்தை சார்ந்தவர்கள் ஆட்சிக்கு வர முடியாமல் இருக்க பின்னர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.

இந்த பகதூர் சாம்ராஜ்யத்துக்கு கலீல் சிங் சிம்ம சொப்பனமாக விளங்க அவருடைய மகனை தேர்தலில் நிறுத்தலாம் என முடிவு செய்து வெளிநாட்டில் இருந்து அவரை வரவழைக்கிறார்கள். உபேந்திராவின் அண்ணனாக நடித்துள்ள கிருஷ்ணா முரளியால் கலிலீன் மகன் கொல்லப்படுகிறான். இதனால் கோபத்தில் கலீல் கிருஷ்ணா முரளியை கொல்கிறார். இதனால் தன் அண்ணனை கொலை செய்த கலீலை பழிவாங்க வேண்டும் என உபேந்திரா முடிவு செய்துள்ளார். படம் முழுக்க நிறைய வன்முறை காட்சிகள் இருக்கிறது.

ரத்தமும், கொலையும் நிறைந்த காட்சிகள் அதிக அளவில் இருக்கும் நிலையில் அந்த வன்முறையை சற்று குறைத்து காண்பித்து இருந்தால் படம் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். உபேந்திரா எப்படி கேங்ஸ்டராக மாறி அனைவரையும் பழி வாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. மேலும் கேஜிஎஃப் பட சாயலில் கப்ஜா எடுக்கப்பட்டிருந்தாலும் அந்த பட அளவுக்கு இல்லை. ஆனால் கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் கப்ஜா படத்திலிருந்து இசையமைத்திருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் தான் என்று சொல்ல வேண்டும்.