உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 13 வயது சிறுமியை சமூக வலைதளம் வழியாக மயக்கி, மிரட்டி, பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்யன் சிங் என்ற இளைஞர், இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு நண்பர் கோரிக்கை அனுப்பி, அவரது நம்பிக்கையைப் பெற்று, மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
சிறுமியின் குடும்பத்தை தாக்குவதாக மிரட்டி, அவரிடம் 45,000 முதல் 50,000 ரூபாய் வரை பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆர்யன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
நாகா ஹிண்டோலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின்படி, ஆர்யன் சிறுமியை தொடர்ந்து மிரட்டி, ஆகஸ்ட் 29ஆம் தேதி மேலும் 50,000 ரூபாய் அல்லது நகைகளைக் கேட்டு, புல்லட் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு பணம் தேவை எனக் கூறியுள்ளார்.
சிறுமி இதற்கு இணங்காததால், ஆர்யன் அவரது வீட்டிற்கு நேரடியாக வந்தபோது, குடும்பத்தினரால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிறுமி ஆர்யனின் சகோதரியிடம் பேச முயன்றபோது, அவர் அவதூறு பேச்சுகளையும், மரண மிரட்டல்களையும் விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நாகா ஹிண்டோலா காவல் நிலைய பொறுப்பாளர் உறுதி செய்துள்ளார்.
