கர்நாடகாவின் பெங்களூருவில் பயங்கரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 41 வயதான மஞ்சு பிரகாஷ் என்பவர், தனது செருப்பில் மறைந்திருந்த பாம்பு கடித்ததால் உயிரிழந்தார். பெங்களூரு மாவட்டத்தின் அனேகல் தாலுக்காவில் உள்ள பன்னேர்கட்டா, ரங்கநாத் லேஅவுட்டில் இந்த துயர சம்பவம் நடந்தது.

மஞ்சு பிரகாஷ், வழக்கம்போல் காலையில் வீட்டு முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த க்ராக்ஸ் செருப்பை அணிந்து வெளியே சென்றார். ஆனால், அந்த செருப்பில் பாம்பு ஒளிந்திருந்தது தெரியாமல், அது அவரது காலில் கடித்துவிட்டது.

மஞ்சு பிரகாஷுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றால் ஒரு காலில் உணர்வு இழந்திருந்ததால், பாம்பு கடித்தது அவருக்கு தெரியவில்லை. வெளியே சென்று திரும்பிய பிறகு, அவர் படுக்கையில் படுத்து உறங்கினார்.

ஆனால், பாம்பின் விஷம் உடலில் பரவி, உறக்கத்திலேயே அவர் உயிரிழந்தார். பக்கத்து வீட்டார் செருப்பில் பாம்பு இருப்பதை பார்த்து, உடனே மஞ்சுவின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால், அவர்கள் வந்து பார்க்கும்போது மஞ்சு ஏற்கனவே இறந்துவிட்டார். மழைக்காலத்தில் காலணிகள் அல்லது செருப்புகளை அணியும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனெனில் பாம்புகள் வீட்டிற்குள் புகுந்து, இதுபோன்ற இடங்களில் ஒளிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.