மகாராஷ்டிரா மாநிலத்தில் நாய் கடித்ததற்காக தடுப்பூசி போடச் சென்ற 17 வயது இளம் சிறுமி ஒருவர், ஊசி போட்ட சில நிமிடங்களிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததைத் தொடர்ந்து அந்தச் சிறுமியை அவரது பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு நாய் கடிக்கான தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே, அவர் எதிர்பாராத விதமாக மயங்கி கீழே விழுந்துள்ளார்.

அப்படி மயங்கி கீழே விழுந்த போது அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அந்த காயத்தின் காரணமாகவே சிறுமி உயிரிழந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், சிறுமியின் இந்த திடீர் மரணத்திற்கு உண்மையான காரணம் தடுப்பூசி அலர்ஜியா அல்லது தலையில் ஏற்பட்ட காயமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முழுமையான உண்மைகள் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.