ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 94 வயது முதியவர் ஒருவர், தனது வாழ்நாளின் இறுதி நாட்களைச் சொந்தக் கிராமத்தில் கழித்து, அங்கேயே தன் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்ற உருக்கமான கோரிக்கையுடன் இந்திய குடியுரிமை கோரி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கொண்டிரகுண்டா மகாலட்சுமம்மா என்ற இந்த பாட்டி, கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே அமெரிக்க குடியுரிமை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது கணவர் நாகபூஷணத்தின் மறைவுக்குப் பிறகு, புற்றுநோய் நிபுணரான தனது மகன் புச்சையா சௌத்ரியுடன் வசிப்பதற்காக அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்திற்குச் சென்ற இவர், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு சுமார் 18 ஆண்டுகள் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இவரது மகன் மங்களகிரியில் உள்ள என்.ஆர்.ஐ மருத்துவமனையில் பணியில் சேர்ந்ததைத் தொடர்ந்து, மகாலட்சுமம்மா மீண்டும் இந்தியா திரும்பி தனது சொந்த கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், பாபட்லா மாவட்ட ஆட்சியர் ஜே.வெங்கட முரளியைச் சந்தித்து, தான் ஏற்கனவே அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டதாகவும், இந்திய குடியுரிமை கோரி ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தனது 95 வயதை நெருங்கும் வேளையில், இந்தியக் குடிமகளாகத் தாய்நாட்டிலேயே இறுதி நாட்களைக் கழிக்க விரும்புவதாகவும், நாட்டின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன் என்றும் பாட்டி உறுதியளித்துள்ளார். இந்த மனுவைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், உரிய விசாரணைக்குப் பிறகு மாநில அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிசீலனைக்கு அது அனுப்பி வைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.