வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. 2024-ம் ஆண்டு இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்டதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகியுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்ட ஷெரீப்பை, இந்தியாவே சதி செய்து கொன்றதாகவும், கொலையாளி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் ஏற்கனவே சீனா மற்றும் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து வருவதால், இந்தியா – வங்கதேசம் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த அரசியல் மோதல் தற்போது மதக்கலவரமாக உருவெடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷெரீப் கொலைக்குப் பழிவாங்க, இந்து மதத்தைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்பவர் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
மற்றொரு தலைவரான மொதலேப் சிக்தர் தாக்கப்பட்டதற்கும் இந்தியா தான் காரணம் எனப் போராட்டக்காரர்கள் கோபத்தைத் திருப்பி வருகின்றனர். இதனால் அங்குள்ள சிறுபான்மையினரான இந்துக்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கூறி, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி டெல்லி மற்றும் கொல்கத்தாவில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.
