பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், பொது இடங்களில் சிகரெட் புகைப்பதை கண்டித்த தனது 16 வயது மகளை, ஆத்திரமடைந்த தாய் கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
லாகூரிலிருந்து 400 கி.மீ தொலைவில் உள்ள பகவல்பூர் மாவட்டத்தின் பஸ்தி சோகர் பகுதியில் வசித்து வரும் நபிலா அகமது (45) என்ற பெண்ணுக்கும், அவரது மகள் ஆயிஷாவுக்கும் (16) இடையே புகைபிடிக்கும் பழக்கம் தொடர்பாக நீண்டகாலமாக மோதல் இருந்து வந்துள்ளது.
தாய் பொது இடங்களில் சிகரெட் புகைப்பதை ஆயிஷா கடுமையாக எதிர்த்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்திற்குச் சென்ற நபிலா, தனது மகளைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு வீட்டிலிருந்து தப்பியோடினார்.
தகவலறிந்த போலீஸார், உயிரிழந்த ஆயிஷாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய நபிலா அகமதுவை தேடி வந்த தனிப்படை போலீஸார், அவரைத் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.தடய அறிவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்து முக்கிய ஆதாரங்களைச் சேகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக முறையான கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்காமல், கட்டுக்கடங்காத ஆத்திரத்தால் ஒரு தாயே மகளைக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
