ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கப் போர் விமானங்கள் தனது வான்வெளியைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபல்ஸ் வெளியிட்ட அறிக்கையில் ஈரான் போர் தொடர்பான எத்தகைய ராணுவ நடவடிக்கைகளுக்கும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியையோ அல்லது அங்குள்ள ராணுவத் தளங்களையோ பயன்படுத்த அனுமதி வழங்கப்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக ஒருதலைப்பட்சமாகத் தொடங்கப்பட்ட இந்தப் போரில் தங்கள் நாடு எவ்விதத்திலும் பங்களிக்கக் கூடாது என்ற அரசின் கொள்கை முடிவின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்பெயின் அரசின் இந்தத் திடீர் முடிவால் அமெரிக்கப் போர் விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானங்கள் அந்த நாட்டைச் சுற்றிக்கொண்டு நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கான செலவு அதிகரித்துள்ளதுடன் பயண நேரமும் கணிசமாகக் கூடியுள்ளது.
அவசர காலச் சூழ்நிலைகளில் மட்டுமே இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் ஸ்பெயினின் இந்தச் செயலால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்துள்ளது. பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான இடதுசாரி அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு நேட்டோ கூட்டமைப்பு நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் இந்த அறிவிப்பால் ஆத்திரமடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்த நாட்டுடனான வர்த்தக உறவுகளைத் துண்டித்துவிடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு நட்பு நாடு இக்கட்டான போர்ச் சூழலில் இவ்வாறு முட்டுக்கட்டை போடுவது ஏற்கத்தக்கதல்ல என்று அமெரிக்கத் தரப்பில் கூறப்படுகிறது.
அதே சமயம் தனது நாட்டின் இறையாண்மை மற்றும் சர்வதேச விதிகளின் படியே இந்த முடிவை எடுத்துள்ளதாக ஸ்பெயின் உறுதியாகத் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே வெடித்துள்ள இந்த மோதலால் ஐரோப்பியப் பிராந்தியத்தில் புதிய அரசியல் நெருக்கடி உருவாகியுள்ளதுடன் சர்வதேசப் பொருளாதாரத்திலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
