உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் பண ஆசைக்காகச் சொந்தத் தாயையே மகன் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அதைச் சிறுத்தை தாக்குதல் போல் நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வனவிலங்கு தாக்குதலால் உயிரிழப்பவர்களுக்கு அரசு வழங்கும் ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதற்காகவே இந்த கொடூரச் செயலை மகன் அரங்கேற்றியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தாயைக் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர், வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி தாய் உயிரிழந்தது போல் காட்டுவதற்காக, அவரது உடலில் அத்தகைய காயங்களை உருவாக்கி உடலைக் காட்டுப் பகுதியில் வீசியுள்ளார்.
அதன் பிறகு, கிராம மக்களிடமும் அதிகாரிகளிடமும் சிறுத்தை தாக்கியே தனது தாய் இறந்ததாகக் கூறி கதறி அழுது நாடகமாடியுள்ளார். எனினும், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தாயின் உடலில் இருந்த காயங்கள் சிறுத்தை தாக்கியதால் ஏற்பட்டவை அல்ல என்பதும், அவை மனிதர்களால் கூர்மையான ஆயுதத்தைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை என்பதும் உறுதியானது.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மகனிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, ரூ. 5 லட்சம் இழப்பீட்டுப் பணத்தைப் பெறவே இந்தத் திட்டத்தைத் தீட்டித் தாயைக் கொன்றதாக அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்துக் குற்றவாளியைக் கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
