மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அமெரிக்காவிற்கு ஒரு ரகசிய செய்தியை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈராக் மற்றும் அதன் ஆதரவு குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தளர்த்த வேண்டாம் என்றும், ஈரான் முழுமையாகப் பணிந்து வரும் வரை அதன் மீதான தாக்குதல்களையோ அல்லது அழுத்தங்களையோ நிறுத்தக்கூடாது என்றும் அந்த நாடுகள் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளன.
மேலும் ஈரானின் பிராந்திய செல்வாக்கைக் கட்டுப்படுத்தவும், தங்கள் நாடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இந்த நாடுகள் இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த ரகசியத் தகவல் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான ஆழமான பகைமையையும், ஈரானின் அணுசக்தி மற்றும் ராணுவ பலம் குறித்த அண்டை நாடுகளின் அச்சத்தையும் வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில் ஏற்கனவே இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் மேற்கு ஆசியா கொந்தளிப்பான சூழலில் இருக்கும் நிலையில், அரபு நாடுகளின் இந்த மறைமுக ஆதரவு அமெரிக்காவின் அடுத்தகட்ட ராணுவ நகர்வுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
மேலும் ஈரானைத் தொடர்ந்து நெருக்கடிக்குள் வைத்திருப்பது அந்தப் பகுதியில் நீண்டகால அமைதியைக் கொண்டுவரும் என்று இந்த நாடுகள் நம்பினாலும், இது ஒரு பெரிய அளவிலான மோதலுக்கு வழிவகுக்குமோ என்ற கவலையும் சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
