திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காட்டார்குளம் பகுதியில் ஆட்டோ டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ் இசக்கியம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 2021-ஆம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து சில நாட்களிலேயே இறந்துவிட்டது. இதனை அடுத்து மீண்டும் கர்ப்பமான இசக்கியம்மாளுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. நேற்று சவாரிக்காக ரமேஷ் சேரன்மகாதேவிக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் தன்னுடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென காணாமல் போனதாக இசக்கியம்மாள் செல்போன் மூலம் தனது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனை கேட்டு விரைந்து வந்ததால் சேரன்மகாதேவி அருகே ரமேஷின் ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில் லேசான காயத்துடன் உயிர் தப்பிய ரமேஷ் மோட்டார் சைக்கிளில் சென்றவரிடன் லிப்ட் கேட்டு வீட்டிற்கு விரைந்து வந்தார். பின்னர் ரமேஷ் உறவினர்களுடன் தனது குழந்தையை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார்.

இதற்கிடையே அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் பெண் குழந்தையின் உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தியதில் அது ரமேஷின் குழந்தை என்பது தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

அதாவது சற்று மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இசக்கியம்மாள் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று ரமேஷ் வெளியே சென்றவுடன் குழந்தையை தூக்கிக்கொண்டு இசக்கியம்மாள் வெளியே சென்று ஊரில் இருக்கும் கிணற்றில் வீசி விட்டு வீட்டிற்கு வந்துவிட்டார். பின்னர் தனது குழந்தை காணவில்லை என கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு பிறந்த ஆண் குழந்தையும் தொட்டிலில் பிணமாக கிடந்தது. அதனையும் இசக்கியம்மாள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.