இந்தியா முழுவதும் உள்ள மக்கள் வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஸ்னாப்சாட் உள்ளிட்ட பிரபலமான மெசேஜிங் செயலிகளைப் பயன்படுத்தும் விதத்தை மாற்றக்கூடிய ஒரு முக்கிய உத்தரவை இந்திய அரசு பிறப்பித்துள்ளது. தொலைத்தொடர்புத் துறை, இந்தச் செயலிகளைப் பயன்படுத்துவோர் தங்கள் சாதனத்தில் செயலில் உள்ள சிம் கார்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை, ‘தொலைத்தொடர்பு இணையப் பாதுகாப்புக் திருத்த விதிகள், 2025’ இன் கீழ் வந்துள்ளது. இந்த விதிகளின் கீழ், இந்தச் செயலிகள் ‘தொலைத்தொடர்பு அடையாளப் பயனர் நிறுவனங்கள்’ எனப் பிரிக்கப்பட்டு, இனி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குரிய விதிமுறைகளுக்குக் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி, இந்தச் செயலிகளைப் பயன்படுத்தும் பயனரின் சிம் கார்டு, செயலியுடன் 90 நாட்களுக்குள் தொடர்ச்சியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தளங்களை இணைய உலாவிகளில் பயன்படுத்துபவர்களுக்கு, ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை தானாகவே லாக் அவுட் செய்யப்பட்டு, மீண்டும் QR குறியீடு மூலம் உள்நுழையக் கேட்கும் கூடுதல் பாதுகாப்பு நடைமுறை சேர்க்கப்பட்டுள்ளது.

இது, ஒருமுறை மட்டுமே எண் சரிபார்க்கப்பட்டு, சிம் கார்டு அகற்றப்பட்டாலும் செயலி தொடர்ந்து இயங்குவதால் ஏற்படும் சைபர் குற்றங்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வங்கிகள் மற்றும் யுபிஐ செயலிகளில் ஏற்கெனவே இருக்கும் கட்டாயச் சிம் இணைப்புப் போன்றே, இந்த நடவடிக்கை மோசடி அழைப்புகள், ஸ்பேம் மற்றும் நிதி மோசடிகளைக் குறைக்கும் என்று தொலைத்தொடர்புத் துறை நம்புகிறது.