மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டத்தில் குரான்வாடி அருகே உள்ள கோச்சிவாடே கிராமத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 22ஆம் தேதி மாலை வழக்கம்போல பள்ளி முடிவடைந்ததும் சிறுவர், சிறுமிகள் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே 3 சிறுமிகள் ஒரு சிறுவன் ஆகியோர் சேர்ந்து நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு ஆட்டோவில் வந்த 3 திருநங்கைகள் கத்தியை காட்டி மிரட்டி குழந்தைகளை கடத்தி செல்ல முயற்சித்தனர். அதனால் பயந்து போன குழந்தைகள் கத்தி கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆட்டோவை மடக்கி பிடித்துள்ளனர்.

பின்னர் ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேரையும் பிடித்து சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் 3 திருநங்கைகளையும் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில், குழந்தைகளை கடத்த முயற்சித்த மூன்று பேரும் திருநங்கைகள் போல் வேடமிட்டுள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து ஆட்டோ ஓட்டுனர் உட்பட 4 பேரின் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.