சென்னை தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் கோகுல கண்ணன் (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கை நிறைய சம்பாதித்துள்ளார். கோகுல கண்ணனுக்கு 25 வயது இருக்கும்போது முடி அனைத்தும் கொட்டி விட்டதால் வழுக்கை தலையாக இருந்துள்ளார். இதனால் அவரை நண்பர்கள் கோகுல கண்ணனை கேலி செய்ததோடு உறவினர்களும் உனக்கு திருமணம் நடக்காது என்று கூறியுள்ளனர். கடந்த 7 வருடங்களாக கோகுல கண்ணனின் பெற்றோர் அவருக்கு பெண் தேடியும் வழுக்கை தலை என்ற ஒரே ஒரு காரணத்திற்காக பெண் கிடைக்கவில்லை.

இதனால் கோகுல கண்ணன் மிகுந்த மன உளைச்சலில் இருந்த நிலையில் ஒருநாள் தரகர் லோக பிரியா என்ற பெண்ணின் புகைப்படத்தை காண்பித்துள்ளார். லோக பிரியாவின் புகைப்படத்தை பார்த்ததும் கோகுல கண்ணனுக்கு மிகவும் பிடித்ததால் எப்படியாவது அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக தன்னுடைய வழுக்கை தலையை மறைத்து விக் வைத்துள்ளார். விக்வைத்துக் கொண்டு எடுத்த புகைப்படத்தை பெண்ணின் வீட்டார் அனுப்ப அவர்களுக்கும் கோகுல கண்ணனை படித்ததால் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கோகுல கண்ணன் ஒரு நாள் குளித்துவிட்டு வரும்போது தலையில் விக் வைக்க மறந்துள்ளார். அந்த சமயத்தில் திடீரென லோகப்பிரியா அறைக்குள் வந்ததால் கணவரை பார்த்து அதிர்ச்சியாகியுள்ளார். வழுக்கை தலையாக இருந்து கொண்டு என்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டீர்களே என்று லோக பிரியா ஆத்திரத்தில் கத்த அவரை சமாதானப்படுத்த கோகுல கண்ணன் முயன்றுள்ளார். ஆனால் லோக பிரியாவை சமாதானப்படுத்த முடியாததால் ஆத்திரத்தில் கோகுல கண்ணன் அவரை சரமாரியாக தாக்க சம்பவ இடத்திலேயே லோக பிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் லோகப்பிரியாவை தூக்கில் தொங்க விட்டுவிட்டு அவர் தற்கொலை செய்து விட்டதாக போலீசாருக்கு கோகுல கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் கோகுல கண்ணனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவரிடம் கிடுக்கப்பிடி விசாரணை நடத்தியதில் நடந்த சம்பவங்கள் தெரியவந்துள்ளது. அவருக்கு உடனடியாக இருந்த கோகுல கண்ணனின் தாயார் ராஜேஷ்வரியையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தலைமுடியில் நடந்த பிரச்சனை கடைசியில் கொலையில் முடிந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.