தெலுங்கானா மாநிலம் பஞ்சருபள்ளி கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு தன் அண்ணன் மனைவியுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சந்தேகப்பட்ட அண்ணன் தன் தம்பி மீது கிராம பஞ்சாயத்தாரிடம் புகாரளித்துள்ளார். அப்போது குற்றம் செய்யவில்லை எனில் அதை அக்னி பரீட்சை செய்து நிரூபிக்க வேண்டும் என கிராம பஞ்சாயத்து தலைவர்கள் கூறி உள்ளனர். அந்த வகையில் அக்னி பரீட்சைக்காக தீமூட்டி அதில் பெரிய இரும்புக்கம்பி ஒன்றை போட்டு வைத்து உள்ளனர். நெருப்பில் கிடந்து சூடான அந்த கம்பியை வெறும் கைகளால் எடுத்து அகற்றவேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

இந்த அக்னி பரீட்சையை செய்தவருக்கு கையில் தீக்காயம் ஏற்படா விட்டால் அவர் குற்றம் செய்திருக்க மாட்டார் என்பது நம்பிக்கை. அதன்படி, தம்பியும் பஞ்சாயத்தார் சொன்னபடி பழுக்க காய்ச்சப்பட்ட கம்பியை வெற்று கைகளால் நெருப்பிலிருந்து எடுத்து வீசி அக்னி பரீச்சையை செய்து விட்டார். கடந்த பிப்ரவரி 25ம் தேதி இந்த அக்னி பரீட்சை நடத்திருக்கிறது. எனினும் திருப்தி அடையாமல் அவரை தான் செய்த தவற்றை ஒப்புக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தினர்.

இதன் காரணமாக அந்நபரின் மனைவி போலீசில் புகாரளித்துள்ளார். அதாவது, தன் கணவர் அவர்கள் கூறியபடி அக்னி பரீட்சை செய்தபோது கையில் தீக்காயம் ஒன்றும் ஏற்படவில்லை. அவர் தவறுசெய்யவில்லை என்பதை நிரூபித்து விட்டார். இருப்பினும் அவரை தவறு செய்ததாக ஒப்புக்கொள்ள சொல்லி வற்புறுத்துகிறார்கள் என கூறியுள்ளார். அதோடு பஞ்சாயத்து தலைவர்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக சொல்லி ரூ.11 லட்சம் தொகையை பறித்துக் கொண்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.